35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம் பிடித்த முதியவர்... நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
கர்நாடகாவில் காதலித்த பெண்ணை 35 வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்ட முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பொதுவாக இளைய சமுதாயம் காதலில் விழுந்தால் அதற்கு எதிர்ப்பு கிளம்பும். ஏனெனில் காதலுக்கு கண்கள் இல்லை என சொல்வார்கள். ஆனால் அதற்கு காலநேரமும் இல்லை என்பதை முதியவர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் விரும்பிய பெண்ணை கரம் பிடிக்க 35 ஆண்டுகள் காத்திருந்துள்ளார். அவரது காத்திருப்பு கடைசியில் வீண்போகவும் இல்லை. தன்னுடைய 65-வது வயதில், காதலித்த பெண்ணின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூர் அருகிலுள்ள ஹெப்பாலா பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயம்மாவைக் இளம் வயதில் காதலித்துள்ளார். ஆனால் சிக்கண்ணாவின் காதலை ஜெயம்மா ஏற்க மறுத்து வேறொருவரை ஜெயம்மா திருமணம் செய்து கொண்டார். ஏனெனில் ஜெயம்மாவும் சிக்கண்ணாவை காதலித்தாலும், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்ததால் ஜெயம்மா மறுத்துள்ளார்.
அதிலும் கட்டிட கூலித் தொழிலாளியாக இருக்கும் சிக்கண்ணாவை ஏற்க, ஜெயம்மாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் காதலித்தவரை மறுத்துவிட்டு வீட்டில் பார்த்த வேறொருவரை திருமணம் செய்துகொண்ட ஜெயம்மாவிற்கு திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணமான ஜெயம்மாவுக்கு குழந்தைபேறு இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் 30-வது வயதில் ஜெயம்மாவை விட்டுவிட்டு தாலி கட்டிய கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நிராதரவான ஜெயம்மா பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்து வாழ்க்கையை ஓட்டினார்.
ஜெயம்மா தன் காதலை நிராகரித்ததால், மனம் உடைந்து போன சிக்கண்ணா சொந்த ஊரை காலி செய்து வேறு இடம் சென்றுவிட்டார். திருமணமே செய்து கொள்ளாமல் தன் காதலியின் நினைவாகவே வாழ்ந்து வந்த சிக்கண்ணாவிற்கு ஜெயம்மாவின் திருமண வாழ்க்கை முறிந்து போன விஷயம் தெரியாது.
இப்போது ஜெயம்மாவுக்கு 65 வயதாகிறது. சமீபத்தில் ஜெயம்மாவின் நிலை குறித்து சிக்கண்ணா தெரிந்து கொண்டார். சிக்கண்ணாவும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தன் காதலி ஜெயம்மாவை திருமணம் செய்து கொள்ள மீண்டும் அவரிடம் கேட்டுள்ளார். சிக்கண்ணாவின் உண்மையான அன்பை புரிந்து கொண்ட ஜெயம்மா திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் திருமணம் மாண்டியாவில் உள்ள மேலுகோட்டே செலுவராய்சுவாமி கோவில் எதிரே சீனிவாஸ் குருஜி ஆசிரமத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இரு தரப்பு உறவினர்களும் கலந்து கொண்டனர்.
60 வயதைக் கடந்த முதிய தம்பதிகளின் திருமணம், உறவினர்கள் புடைசூழ சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
வாழ்க்கையின் கடைசி பகுதியில் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ள அவர்கள் இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
35 ஆண்டுகளாக காத்திருந்து தன் காதலியை கரம் பிடித்த சிக்கண்ணாவிற்கு ஸ்பெஷலாக வாழ்த்துக்கள் வருகின்றது. இந்த நெகிழ வைக்கும் சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.